Thursday 1 February 2018

நீலத் தாமரை (Blue Lotus Water Garden)

ஊர்சுற்றிப் புராணம் -மெல்பேர்ண்

மெல்பேர்ணில் இருந்து காரில் சென்றால், ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களில் யாராவலியை (Yarra Junction / Yarra Valley) அடைந்துவிடலாம். அங்கேதான் இந்த இந்த அற்புத தாமரைத் தடாகத்தைக் கண்டு கொண்டேன். மார்கழி மாதத்தில் இருந்து சித்திரை மாதம் வரை (கோடை / இலையுதிர்காலம்) பார்வைக்காகத் திறந்திருக்கின்றார்கள்.

2006 ஆம் ஆண்டு Geoff, Yvonne என்பவர்களால் இது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.  50,000 சதுர மீற்றர் (14 ஏக்கர்) பரப்பளவு கொண்ட இந்த நீர்த் தோட்டத்தில் தாமரை, நீலோற்பலம் மற்றும் அரிய வகையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்த்தாவரங்கள் உள்ளன. இங்கே 12 குளங்கள், 2 ஏரிகள், பல நீரூற்றுகள் உள்ளன. இவற்றை பாலங்களும் நடைபாதைகளும் இணைக்கின்றன.

தாமரையும் நீலோற்பலத்தையும் எப்படி இனம் காண்பது? தண்டு நீண்டு நீர் மட்டத்திற்கு மேல் பூ இருந்தால் தாமரை (lotus), நீர்மட்டத்தோடு பூ இருந்தால் நீலோற்பலம்.(waterlily).
சீனர்கள், வியட்நாமியர்கள் தத்தமது பிரத்தியேகமான ஆடைகளுடன் அங்கும் இங்குமாக ஓடித் திரிந்தார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். BBQ செய்வதற்கான வசதிகள் (சைவம் உட்பட), பல சிறிய குடில்கள், சிறுவர்களுக்கன Fairy Garden மற்றும் இன்ரநெற் வசதிகளும் இங்கே உண்டு. அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யும் - தாமரை வேரிலிருந்து செய்யும் சிப்ஸ் – மறக்காமல் வாங்கிச் சாப்பிடுங்கள். இங்கே நான் சில வித்தியாசமான வாழைமரங்களையும், ஜப்பான் தேசத்தின் மிகப்பழமை வாய்ந்த தாமரைகளையும் கண்டு கொண்டேன். நுழைவுச்சீட்டிற்குப் பெறுமதியான அற்புத சுற்றுலா அனுபவத்தை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.

 


1 comment: