Wednesday 23 July 2014

ஆங்கொரு பொந்திடை வைத்த...


"அரை மணித்தியாலத்துக்குள்அலுவலை முடிச்சிட வேணும்"
முன்னாலே சைக்கிளில் போய்க்கொண்டிருந்த கபாலர் சொன்னார்.
"இப்ப ஐஞ்சேகால். ஐஞ்சரைக்கு முன்னம் வாசிகசாலையடிக்குப் போய் விடுவம். ஆறுமணி மட்டிலை திரும்பி விடவேணும்" ஏற்கனவே கதைத்துப் பேசி வந்திருந்த போதிலும் மீண்டும் ஞாபகமூட்டினார் கோபாலர். ஊரிலை இருக்கேக்கை பத்துப் பதினைந்து வீடுகள் இடைவெளி தூரத்திலை இருந்திருப்பம். இப்ப, இடம்பெயர்ந்த பின்பு இடைவெளி நெருக்கமாகி பக்கத்துப் பக்கத்து வீடுகளில் தஞ்சமடைந் திருக்கிறோம். கோபாலர் இதற்கு முன்பும் ஒருதடவை போய் வீட்டிலிருந்து பொருட்களை எடுத்திருக்கின்றார். அந்தத் துணிவு தந்த தைரியத்தில்தான் இன்று என்னையும் கூட்டிக் கொண்டு போகின்றார்.
"பாத்தியேடா தம்பி! மூண்டு கிழமைக்கு முதல் எவ்வளவு சொர்க்கபுரியா இருந்தது எங்கட ஊர். இப்ப நரகமாப் போச்சு."
சைக்கிள்கள் இரண்டும் பிரதான வீதியிலிருந்தும் விலகி, குறுகலான பாதையில் விரைந்து கொண்டிருந்தன. தெரு வெறிச்சோடிக் கிடந்தது. கோபாலரை முன்னாலே போகவிட்டு நான் பின்னாலே போய்க் கொண்டிருந்தேன். மழை பெய்த தெருவில் சைக்கிள் ஓடும்போது ஏற்படும் 'சர சர' ஒலியைத் தவிர வேறு ஒரு சத்தமுமில்லை. நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பொக்கற்றுக்குள்ளிருந்த பேப்பரை எடுத்துப் பார்த்தேன்.
1. என்னுடையதும் தங்கைச்சியினதும் சேர்ட்டிபிக்கேட்டுகள்
2. அப்பா சொன்ன சுவாமிப் படங்கள்
3. கொத்து விறகு
4. தேங்காய்
5. புத்தகங்கள் (மு.வ இன் அகல்விளக்கு நாவல், ராஜகோபாலாச்சாரியார் எழுதிய வியாசர் விருந்து, தங்கம்மா அப்பாக்குட்டி எழுதிய சமயக்கட்டுரைகள்)
இவ்வளவும் நான் எழுதியிருந்தவை. இவற்றிற்குக் கீழே எனது தங்கை புதிதாக ஒன்றைச் சிவப்பு மையினால் சேர்த்திருந்தாள்.
6. ரேணு போய்

Sunday 20 July 2014

’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ -நூல்விமர்சனம் [ எம்.ஜெயராமசர்மா]

(20.07.2014 தினக்குரல் வாரமலரில் வெளிவந்த கட்டுரையின் முழுவடிவம்)

பல்வேறு காரணங்களால் தமிழர்கள் தமது நாட்டைவிட்டு அன்னிய நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். நாட்டைவிட்டு வாழ்ந்து வந்தபோதிலும் அவர்களில் பலர் தங்களது மொழியை கலாசாரத்தை மறக்காமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம் எனலாம். அவர்களின் வாழ்க்கை என்னவோ அன்னிய நாட்டிலே அமைந்துவிட்டாலும் கூட அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடத்தையோ, அங்கிருக்கும் உறவுகளையோ மறக்காமலும் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய சுகங்கள் துக்கங்கள் எல்லாம் அன்னிய நாட்டில் வாழ்கின்றவர்

மனத்தில் ஏதோ ஒரு பக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. அந்த எண்ணம் அவர்களைவிட்டு என்றுமே அகலமாட்டாது. இதைத்தான் தொப்புள் கொடி உறவு என்பதா? அல்லது பாசப்பிணைப்பு என்பதா? எப்படியும் எடுத்துக் கொள்ளலாம்தானே!

இந்தளவு விளக்கம் ஏன் என்று நீங்கள் எண்ணுவது எனக்குப் புரியாமல் இல்லை. ஒரு முக்கிய விஷயத்தை தொட விரும்பியதால்தான் இந்த விளக்கம் எல்லாம். புலம்பெயர் வாழ்க்கையை நடத்தும் திரு கே.எஸ்.சுதாகர் ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்னும் சிறுகதைத்தொகுதியை எங்கள் கைகளிலே தவள விட்டிருக்கிறார். அந்தத் தொகுதியில் உள்ள கதைகளை வாசிப்பவர்களுக்காகவேதான் இந்தவிளக்கம் சொல்லவேண்டியேற்பட்டது.

பன்னிரெண்டு சிறுகதைகள் கொண்டதே இந்தத்தொகுதி. இதில் இலங்கையைக் களமாகக் கொண்ட கதைகள், இலங்கையையும் அன்னியநாட்டையும் களமாக இணைத்து நிற்கும் கதைகள், அன்னிய நாட்டை மட்டும் களமாகக் கொண்ட கதைகள் என இக்கதைகள் எழுதப் பட்டிருக்கின்றன.

அசலும் நகலும்


1.
"ராகவி! விளக்கோடை விளையாடாமல் அண்ணாவுக்குப் பக்கத்திலை போய் இருந்து படி" வாசுகி குசினிக்குள் இருந்து சத்தம் போட்டாள்.
"அப்பா இருட்டுக்கை நிண்டு உடுப்பு மாத்துறார். அதுதான் விளக்கை எடுத்துக் கொண்டு போனனான்."
ஒரு குட்டி மேசை மீது புத்தகம் கொப்பிகளைப் பரப்பி வைத்துக் கொண்டு விளக்கின் வருகைக்காகக் காத்திருந்தான் ராகுலன். அவன் அடுத்த வருடம் பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுத இருக்கின்றான். ராகவி வகுப்பு ஆறு படிக்கின்றாள். இந்த ஒரு விளக்குத்தான் எல்லாத் தேவைகளுக்கும் இங்கு நகர்ந்து திரிகின்றது.
"அப்பா ஏனாம் பிந்தி வந்தவர்?" கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் படலை வரையும் சென்று படலைக் கொழுக்கியைப் பூட்டினாள் வாசுகி. மாரி காலம். நேரத்திற்கே இருட்டி விட்டது. ஊர் அவசர அவசரமாக அடங்கிக் கொண்டிருந்தது. தூரத்தே 'ஆமிக் காம்' ஒளி வெள்ளத்தில் மிதந்தது.
குளிர் நீரில் முகத்தைக் கழுவி விட்டு ஹோலிற்குள் இருந்த வாங்கில் வந்து இருந்தான் தேவன். அவன் நெஞ்சு இன்னமும் படபடத்த படியே இருந்தது. அவனுக்கு நேர் எதிராக 'அந்தப் படம்' சுவரில் தொங்கியது. மனம் கனத்தது.
வாசுகி இன்னமும் அவனுடன் முகம் குடுத்துக் கதைக்கவில்லை. "என்னையும் பிள்ளைகளையும் கனடாவுக்குக் கூட்டிக் கொண்டு போங்கோ!" என்று காலையும் சத்தம் போட்டிருந்தாள். "நான் என்ன செய்யிறது? அது அதுக்கும் ஒரு கொடுப்பனவு வேணும்." கடந்த பத்து வருடங்களாக இந்த உரையாடல் தொடர்கிறது.
வாசுகி சாப்பாட்டை தேவனுக்குப் பக்கத்தில் தொப்பென்று வைத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போனாள். வெள்ளித்தட்டு ஓசையெழுப்பியது. தேவன் பிள்ளைகளைப் பார்த்தான். அவர்கள் இருவரும் படித்துக் கொண்டு இருந்தார்கள்.
"ராகுலனும் ராகவியும் சாப்பிட்டிட்டினமா?"
"ஓம்."

"அப்ப நீரும் சாப்பாட்டைப் போட்டு எடுத்துக் கொண்டு வாரும். சேர்ந்து சாப்பிடுவம்."
"நீங்கள் சாப்பிடுங்கோ. நான் பிறகு சாப்பிடுறன்."
"மாதக் கடைசி எண்டபடியாலை 'பாங்'கிலை வேலை கூடிப் போச்சு. ஊரடங்குக்குள்ளை வந்திட வேணுமெண்ட அவசரத்திலை சைக்கிள் உழக்கினதிலை களைச்சுப் போனன்."
"கனடாவிலை இருந்து ரெலிபோன் வந்தது ...." வாசுகி பேச்சை ஆரம்பிக்க "வாசுகி! வாசுகி!!" என்றபடி நெஞ்சைப் பொத்தினான் தேவன்.

Wednesday 16 July 2014

Harvest of conflicts

Source (in Tamil):  By K.S.Suthahar (“Isruthi”)

“ Uthayam” August 2004.

Translated in English:  Kandiah Kumarasamy
(“Nallaikumaran”)
Melbourne.
22-09-2004

It was the period of useless wanderings and lazy life on completion of tertiary education.  I got an appointment in an undeveloped Singhalese village at far end. Traveling was very tiresome and fear enveloped the journey.
My journey resembled a corpse carried to the burial ground – traveling without food, water and any conversation. I had to sleep on the floor during night in my friend’s room. My friend, Siva, is stationed at Embilipitiya.

“Siva! How long are you stationed here? This room is not comfortable.” – I expressed my mind in excitement.
“Tamils are unlucky.”- He murmured. He must have suffered heavily. His voice echoed as if coming out from the bottom of a well.

It is an undeveloped village with snowy cold in the mornings. I had to travel 8 miles in a dilapidated van clinging on to a pipe fixed on the hood. It ran with tremendous speed flushing the dust from the street.
A friend of Siva accompanied me to the Factory. I did not ask his name. A watchman stood at the entrance with mustache and sideburns.

 “He has come for work in the Factory. He has no Sinhala language knowledge.” I was identified in this manner by the ‘devil’. Then he went on introducing me to the General Manager, Factory Manager, Chief Engineer and others mentioning same identification - “ He has no Sinhala language knowledge”. It was the rubber stamp on my ‘credential’ of Sinhala language. The ‘devil’ disappeared.
I heard harsh words from the laborers. It is the dangerous weapon invented by humans- the stinging words. This weapon opened the anthill of ethnic diversity.

வரலாற்றுத் தடங்கள்

நேற்று பிரான்ஸ் நாட்டிலிருந்து ஊரைச் சுற்றிப்பார்ப்பதற்காக இலங்கை சென்றிருந்த நண்பன் குகநேசனுடன் உரையாடியதன் மூலம் அந்தச் சம்பவம் மீண்டும் புத்துயிர் பெறுகின்றது.

அது நடந்து நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன.


அன்று அலுமினியம் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போயிருந்த இராசன் அண்ணை மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தபோது அந்த அதிசயத் தகவலைச் சொன்னார். அலுமினியம் தொழிற்சாலை, மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் இருக்கும் பிரதேசத்தில் இருந்து கீரிமலைக்குப் போகும் பாதையில் அமைந்துள்ளது.

சீமெந்துத்தொழிற்சாலைக்கு சுண்ணாம்புக்கற்கள் அகழ்ந்தெடுக்கும்போது அந்த அதிசய சம்பவம் நடந்தது. குவாறியில் டைனமற் வெடிக்கும்போது சிதறியகற்களுடன் நீரும் சீறிப் பாய்ந்தது. சிலநிமிடங்கள் நீடித்த அந்தக்காட்சியில், வானோக்கிப் பாய்ந்த நீர் மாவிட்டபுரம் கோபுரமளவிற்கு உயர்ந்ததை தான் அலுமினியம் தொழிற்சாலையில் இருந்து பார்த்ததாக அண்ணா சொன்னார். வெடித்த இடத்தில் ஒரு பெரிய  குகை இருந்ததாகவும் அது முடிவில்லாமல் சுரங்கமாகப் போவதும் ஒரு வரலாற்றுப்புதுமை என்றும் சொன்னார். அண்ணை சொல்லிவிட்டு தன்பாட்டில் மீண்டும் வேலைக்குப் போய்விட்டார். அவர் சொன்ன எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் அவருக்கு இளையவரான எனது அடுத்த அண்ணன் ஆனந்தன்.

மறுநாள் காலை சைக்கிள் கீரிமலையை நோக்கி விரைந்தது. நான் கரியரில் குரங்குக்குட்டிபோல தொங்கிக் கொண்டேன்.

Sunday 6 July 2014

முரண்பாடுகளின் அறுவடை

படித்துவிட்டுப் பாதங்கள் தேய்ந்து கொண்டிருந்த, சோம்பலின் முழுச் சுகத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்த காலமது. வேலை கிடைத்தது. ஒதுக்குப் புறமான சிங்களக் கிராமம் ஒன்று.

வெளிச்சத்திலிருந்து இருளிற்குள் போகின்ற பயணம். பயம் கலந்த பயணம்.

அசைவில்லை. பேச்சில்லை. உணவில்லை. நீரில்லை. செத்த பிணத்தை இருத்திக் கொண்டு போவது போலப் பிரயாணம் இருந்தது.

இரவு. நண்பனின் அறையில் - வெறும்தரையில் படுக்கை. சிவா 'எம்பிலிப்பிட்டியா'வில் இருந்தான்.

"சிவா! எவ்வளவு காலம் இஞ்சை வேலை செய்கிறாய்நல்ல அறை இல்லை" -  நான் அதிசயப் பட்டேன்.
"தமிழனுக்கு எதுவுமே இல்லை" - அவன் முனகினான். நிறையவே 'பட்டு'விட்டான் அவன். கிணத்தின் அடித்தளத்தில் இருந்து ஒலிப்பது போல் இருந்தது அவன் குரல்.

அதிகாலை கொட்டும்பனி. பிற்போக்கான கிராமம். எட்டு மைல் 'தட்டி'வான் பயணம். தட்டிவானுக்குள் ஒரு கம்பி ஓடிற்று. அதன் மீது எல்லாரது கைகளும். நிமிர்ந்தால், மேலே வானம்  ஓடிற்று. குனிந்தால், கீழே  பூமி  ஓடிற்று. காணக் கண்  கோடி வேண்டும். புழுதியைக் கிழப்பி, தொழிற்சாலை எட்டும் வரை - அதே ஓட்டம்.

சிவாவின் நண்பர் ஒருவர் - பெயர் தெரியவில்லை. நான் இருக்கும் நிலையில் கேட்கவுமில்லை. என்னை அழைத்துச் சென்றார்.

தொழிற்சாலை வாசலில் 'செக்கியூரிட்டி' ஆபிசர் மீசை, கன்னக்கிராதி போன்ற வில்லங்கங்களுடன். 

"இவர் பக்டரிக்கு புதிசாக வேலைக்கு....
சிங்களம் அவ்வளவு நல்லா தெரியாது"

அரோகரா (கங்காருப் பாய்ச்சல்கள் -2)

கோவில் நிர்வாகத்தினரிடம் ஏற்படும் உள் சச்சரவுகளால் பக்தர்கள் மாத்திரமன்றி சுவாமிகளுக்கும் சங்கடங்கள் ஏற்படுகின்றன. மெல்பேர்ணில் நான்கு கோவில்கள் பிரசித்தம் வாய்ந்தவை. சிவா- விஷ்ணு, பிள்ளையார், இரண்டு முருகன் கோவில்கள். இந்த இரண்டு முருகன் கோவில்களும் மெல்பேர்ணில் மேற்குப் புறத்தே அமைந்துள்ளன. ஒரு கோவில் நாங்கள் அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு முன்பு கட்டப்பட்டது. மற்றது ஒன்றிலிருந்து பிரிந்து உருவானது.

ஒருமுறை சுவாமி தரிசனத்திற்காக கோவிலிற்குச் சென்றிருந்தோம். பூசை முடிந்து தேவாரம், திருவாசகம் பாடிக் கொண்டிருந்தார்கள். கடும் குளிர். குழந்தை அழுதது. குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு வீட்டிற்குப் புறப்படுவதற்குத் தயாரானோம். பிரசாதம் வாங்க முடியவில்லை. அப்போது ஒரு குரல் கணீரென்று ஒலித்தது.  'மெல்பேர்ண் முருகனுக்கு அரோகரா'. அதைத் தொடர்ந்து மெல்பேர்ணில் கோயில் கொண்டிருக்கும் இடங்களின் பெயர்களை முதலிலும், சுவாமிகளின் பெயரை பின்னரும் சொல்லி 'அரோகரா'.
புதிய கோவிலிற்கு அரோகரா இல்லை, சுவாமிக்கும் இல்லை. இனி என்னால் இப்படித்தான் சொல்ல முடியும்.
"A முருகனுக்கு அரோகரா ; B பிள்ளையாருக்கு அரோகரா ; C சிவா - விஷ்ணுவிற்கு அரோகரா.
 கோயில்கள் அமைந்துள்ள இடங்களின் பெயரை நான் இங்கே சொல்ல முடியாது. A, B, C என்றுதான் சொல்ல முடியும். மீறி சொல்லப் போனால் பிறகு எனக்கு 'அரோகரா'தான். கோர்ட் வரைக்கும் போய் துண்டு துணியில்லாமல் போக வேண்டி வரும். நாங்கள் வெளியேறிச் செல்வதை ஒரு சோடிக் கண்கள் முறைத்துப் பார்த்தன. அதே கண்கள். அவர்கள் அப்படிச் சொல்வதை விரும்பாதபடியால் தான் நாங்கள் கோயிலை விட்டு வெளியேறுவதாக அவர்கள் நினைத்திருக்கலாம். அல்லது மற்றக் கோவிலில் இருந்து வேவு பார்ப்பதற்காக அனுப்பப் பட்டவர்களாகவும் அவர்கள் பார்வையில் நாங்கள் இருக்கலாம்.

துப்பாக்கி - Flashbacks

பதின்மூன்று வயதுதான் இருக்கும். சிறீமாவோ பச்சைப்பாண் தந்து வயிற்றில் அடித்தது போக, பாடத்திட்டத்தை மாற்றி மூளையிலும் அடித்த காலம். எந்தப் பிள்ளையையும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது எழுப்பிக் கேட்டால் ‘அவுக்கண புத்தர் சிலையையும் ‘அனகாரிக தர்மபாலவையும் பற்றியே சொல்லியது.

இலங்கையை முன்னொருகாலத்தில் குறுநிலமன்னர்கள் ஆண்டார்கள். எனது இந்தக்காலத்திலும் வடக்குக் கிழக்கில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் ‘குப்பன்ஒருபக்கமும் ‘சுப்பன்ஒருபக்கமும் என்ற குறுநிலமன்னர்கள் ஆளத் தொடங்கியிருந்தார்கள்.
பாடசாலை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, ‘பின்னேரம் வாசிகசாலையில் கூட்டம் ஒன்று இருக்கு!என்று சொன்னார்கள். வாசிகசாலை – ஒரு சிறிய சீமெந்துக் கட்டடம். ஒரு அறையும் நீண்ட விறாந்தையும் கொண்டது. அறைக்குள் சில புத்தகங்கள், கொஞ்ச தளபாடங்கள். விறாந்தைக்குள் ஒரு நீண்ட மேசை, மேசையைச் சுற்றியோடும் இரண்டு நீண்ட வாங்குகள். வாசிகசாலைக்குப் பொறுப்பாக முரளி அண்ணா இருந்தார். அவ்வப்போது வாசிகசாலையைத் திறந்து தூசி தட்டி - பேப்பர், சில புத்தகங்களைப் (ஆனந்தவிகடன், குமுதம் போன்ற) போடுவது வழக்கம். சிலவேளைகளில் வாசிகசாலைக்குள் இருந்து ஒருவர் அங்கு வருபவர்களின் கையைப் பார்த்து பலன் சொல்லிக்கொண்டிருப்பார். அவரின் பெயரை மறந்தாலும் கை ரேகை சொல்லும் திறனை மறக்கவில்லை. “நீ நல்லாப் படிப்பாயடா!என்று என் கையைப் பார்த்துச் சொல்வார். அப்பொழுது நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். “உங்கடை கை, உங்களைப்பற்றி என்ன சொல்லுது? என்று நான் கேட்பேன். “பாதி வழியில் போய் விடுவேன்என்பார்.