Friday, 8 December 2017

'புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது’ ஒரு கண்ணோட்டம்


ஒரு நேர்காணல் என்பது பசுவிடம் பால் கறப்பதைப் போன்றது. பசுவிடம் நேரிடையாக ஒருவன் பால் கறக்கும்போது, அது சிலவேளைகளில் பாலை ஒழித்துவிடும். இயந்திரம் மூலம் பால் கறக்கும்போது இசகுபிசகாக சில வேளைகளில் இரத்தமும் வந்துவிடும். பசுவிற்கு கன்றைக் காட்டி, அதையும் இடைக்கிடை பால் குடிக்க வைத்து, பால் கறக்கும் வித்தை அற்புதமானது. அந்தத் தந்திரமான நேர்காணல்களை இப்புத்தகத்தில் காண முடிகின்றது. ஒருவரிடம் உள்ள ‘அத்தனையையும்’ கறந்துவிடல் வேண்டும். இன்னொருவர்  வந்து மீண்டும் கறப்பதற்கு அங்கு இடம் வைத்தல் ஆகாது.

நாசூக்கான கேள்விகள், அச்சொட்டான பதில்கள்.

அதைத்தான் கருணாகரனின் இந்த ‘புகைப்படக்காரன் பொய் சொல்லமுடியாது’ நேர்காணல் புத்தகமும் செய்திருக்கின்றது. தொகுப்பில் வரும் புகைப்படக்காரர் மட்டுமல்ல அனைவருமே பொய் சொல்லவில்லை.

Friday, 1 December 2017

கார் காலம் - நாவல்

 அதிகாரம் 17 - மூடுவிழா

கார் காலம் ஆரம்பமாகிவிட்டது. மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து மொட்டையாகின. தெருக்கள் எங்கும் சருகுகள் காற்றினால் அலைக்கழிக்கப்பட்டன. வானம் எப்பொழுதும் இருண்டபடி முகில் கூட்டங்களால் சூழப்பட்டிருந்தது. அடிக்கடி மழை வேறு பொழிந்தது.

ஹெவினின் மனைவி இருதய வால்வு ஒப்பரேஷன் செய்து வைத்தியசாலையில் இருந்தாள். இது அவளிற்கு இரண்டாவது ஒப்பரேஷன். அந்த நாட்களில் வேலை இழந்ததும் மனைவியின் சுகவீனமுமாகச் சேர்ந்து ஹெவினின் மன்நிலையை இறுக்கமடையச் செய்தது. சிலநாட்கள் கழித்து ஆலினை பிறைய்ரன் என்னும் இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்திருந்தார். ஹெவினுக்கு நான்கு இலட்சங்கள் வழங்கிய நிர்வாகம் ஆலினுக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை. ஒழுங்காக வேலைக்கு வராமை, தொழிற்சாலை லீஸ் காரை பலமுறை விபத்துக்குள்ளாக்கியமை போன்ற பல்வேறு காரணங்களை இதற்கு முன்வைத்திருந்தது நிர்வாகம்.

Wednesday, 22 November 2017

கார் காலம் - நாவல்அதிகாரம் 16 - களை எடுத்தல்

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கைகளால்தான் பெயின்றை ஸ்பிறே செய்தார்கள். மெதுவாக அந்த இடத்தை ரோபோக்கள் பிடித்துக் கொண்டன. இன்று பிறரைமரில் 6 ரோபோக்களும், ரொப் கோற்றில் 12 ரோக்களும் வந்துவிட்டன. ரோபோக்கள் வந்ததன் பின்னர் ஆட்களுக்கு வேலை இல்லாமல் போயின. வேலையும் சுத்தமாக அழகாக இருந்தது.

2013 ஆம் ஆண்டு தொழிற்சாலை நிர்வாகம், வேலை செய்பவர்களில் 300 பேர் வரை கட்டாய பணி நீக்கம்  செய்ய இருந்தது. கடைநிலை ஊழியர்களில் இருந்து மனேஜர் வரை இதில் உள்ளடங்குவதாக அது இருந்தது.  யார் தலை எப்போது உருளும் என்று எல்லோரும் பயந்தபடி இருந்தார்கள். தினமும் வேலை செய்யுமிடத்தில் இதைப்பற்றிய பேச்சுத்தான் முக்கிய இடம் பிடித்தது. ஸ்மோக்கோ நேரத்திலும் (smoko Time – தேநீர், புகை பிடிக்கும் இடைவேளை) இதைப்பற்றித்தான் கதையாக இருந்தது.

Wednesday, 15 November 2017

’அம்பரய’ – நூல் அறிமுகம்


 
போராட்டங்கள் நிறைந்த தேடலின் கதை

’அம்பரய’ என்றால் என்ன?

நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்குகையில், என்னுடன் வேலை செய்யும் சக சிங்கள நண்பர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. ஒருவேளை சொல் மயக்கம் அல்லது உச்சரிப்பு காரணமாக அவர்களுக்கு விளங்காமல் இருந்திருக்கலாம்.

’இலங்கையைச் சேர்ந்த சிங்கள எழுத்தாளரான உசுல. பி. விஜய சூரிய ஆங்கிலத்திலேயே அதிகமும் எழுதியவர். அம்பரய 1970 களில் இலங்கையில் வெளியிடப்பட்டது. இதைத்தவிர அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இந்தப் புத்தகத்தில் இல்லை.

அதே போல ஆங்கில வழி மூலம் தமிழிற்குக் கொண்டு வந்தவர் தேவா. தேவா சுவிஸ் நாடைச் சேர்ந்தவர் என்பதைத்தவிர அவர் பற்றிய தகவலும் தெரியவில்லை. இவரது மொழிபெயர்ப்பில் ஏற்கனவே ’சைனா கெய்ரெற்சி’ எழுதிய ‘குழந்தைப் போராளி’ சுயசரிதையை வாசித்திருக்கின்றேன்.